சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று வன்முறையில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து, அ.தி.மு.க. போராட்டம் மற்றும் சிபிஐ விசாரணை கோரிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
அ.தி.மு.க.வினர் நேற்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நியாயமானது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் அந்த உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
நியாயமான ஆர்ப்பாட்டமாக இருந்தால், அரசு அனுமதிக்கும். ஆனால், அந்த ஆர்ப்பாட்டத்தில் கூட சிபிஐ விசாரணை வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தினர். இதே எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, தன் மீது சிபிஐ விசாரணை கொண்டுவரப்பட்டதை அவர் மறந்திருக்க மாட்டார்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்துக்குச் சென்றபோது, அதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ மீது நம்பிக்கை இருந்தால் சவாலை ஏற்றிருக்க வேண்டும். ஆனால் சிபிஐ மீது நம்பிக்கை இல்லாததால் அதற்கு தடை உத்தரவு பெற்ற வீரதீர வீரர் தற்போது இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி முழக்கமிட்டுள்ளார். இவ்வாறு முதல்வர் கூறினார்.