பாட்னா: பீகாரில் முந்தைய மகாபந்தன் கூட்டணி அரசு வழங்கிய ரூ.826 கோடி மதிப்பிலான 350 ஒப்பந்தங்களை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ரத்து செய்துள்ளது.
பொது சுகாதார பொறியியல் துறை (PHED) அமைச்சர் நீரஜ்குமார் சிங் கூறியதாவது: மாநிலத்தில் முந்தைய ஆர்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி ஆட்சியில் பல ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. ரூ.826 கோடி மதிப்பிலான 350 ஒப்பந்தங்கள் வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது துறை ரீதியான விசாரணையில் தெரியவந்தது.
இவை கிராமப்புற நீர் விநியோகம் தொடர்பானவை. கை பம்புகள் அமைப்பது மற்றும் சிறிய நீர் விநியோக கட்டமைப்புகளை நிர்மாணிப்பது ஆகியவை இதில் அடங்கும். இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதையடுத்து ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துவதற்காக மாநில அரசின் உரிய அதிகாரியிடம் முதல் கட்ட விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீரஜ் குமார் சிங் கூறினார்.