புதுடெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஜ்ரிவாலை கைது செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அப்போது, அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் ஆஜர்படுத்தினர். மேலும், கெஜ்ரிவாலை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். இதனிடையே அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
ஜாமீன் வழக்கின் பின்னணி: மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றம் ஜூன் 20ஆம் தேதி உத்தரவிட்டு கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து ஜூன் 21ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் (ED) அவசர மனு தாக்கல் செய்தது. முதலில் ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் மனுவை ஏற்று பின்னர் ஜாமீன் உத்தரவை ரத்து செய்தது. ஜாமீன் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து, கெஜ்ரிவால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.