புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு அதிகபட்சமாக ஆவுடையார்கோவிலில் 120 மி.மீ., மழை பெய்துள்ளது.
புதுக்கோட்டையில் நேற்று இரவு லேசான மழை பெய்ததால், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைக்குறிச்சி வரை 4 வழிச்சாலை பணி நடைபெற்று வருவதால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணல்மேல்குடி பகுதியில் அதிக பரப்பளவில் நேரடி நெற்பயிர் விதைக்கப்பட்ட வயல்களில் உரமிட்டு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாற்றுகள் நடுவதற்கு வயல்களை தயார் செய்யும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.