சென்னை: தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“கடந்த செப்டம்பரில் வங்கக் கடலில் மீன்பிடித்தபோது கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேருக்கு தலா 40 லட்சம் இலங்கை ரூபாய் மற்றும் 1.60 கோடி ரூபாய் அபராதமும், ஒருவருக்கு தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் நோக்கில் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கடந்த மாதம் 21-ம் தேதி பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 37 மீனவர்களும், கடந்த 4 மற்றும் 7-ம் தேதிகளில் புதுக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
பூம்புகார் மீனவர்கள் 37 பேரும், புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரும் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து விடுதலை செய்யப்பட்டனர். மீதம் உள்ள 5 புதுக்கோட்டை மீனவர்களில் ஒருவருக்கு 2-வது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனை விதித்தது.
அதேபோல் மீனவர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாய் வீதம் ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் செலுத்த முடியாமல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 22 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம், அதை செலுத்தும் வரை அவர்களை விடுவிக்க முடியாது என்று கூறியுள்ளது.
அபராதம் கட்ட முடியாத மீனவர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் போன்று பத்துக்கும் மேற்பட்டோர் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதால், அபராதம் கட்ட முடியாமல் மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என தெரியவில்லை.
வங்கக் கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை 6 மாதம் 1 ஆண்டு சிறைத்தண்டனை விதித்த இலங்கை நீதிமன்றங்கள், தற்போது குறைந்தபட்ச சிறைத் தண்டனையை 1.5 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.
இது தவிர கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படுகிறது. நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல் இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை. இதற்கு உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.
இல்லை என்றால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள கடல் மிகவும் குறுகலானது.
எனவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதையும், இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள் நுழைவதையும் தவிர்க்க முடியாது. எனவே, தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் நீண்டகாலமாக மீன்பிடித்து வரும் அதே பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க அனுமதிப்பதே சரியானது.
பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக அபராதம் மற்றும் சிறை தண்டனை பெற்று இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு மற்றும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.