புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற சர்தார் படேல் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்பதற்காக இம்மாத மத்தியில் பாகிஸ்தானுக்கு செல்ல உள்ளேன். எனது பயணம் இந்தியா-பாகிஸ்தான் உறவைப் பற்றியது அல்ல.
ஷாங்காய் ஒத்துழைப்பில் பொறுப்பான உறுப்பினராக இருப்பது மட்டுமே. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவின் காரணமாக அமைப்புக்கு நிறைய ஆர்வம் இருக்கலாம். நான் எஸ்சிஓவில் நல்ல உறுப்பினராக இருக்க விரும்புகிறேன், அதன்படி நடந்துகொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் எஸ்சிஓவில் உறுப்பினராக உள்ளது. அதனால்தான் இந்த முறை உச்சி மாநாடு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஆனால் அது எனது பயணத்தின் தன்மையை மாற்றாது.
அதே சமயம், இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை மட்டும் திட்டமிடாமல், எதிர்பாராத விதமாக என்ன நடக்கலாம் என்பதையும் திட்டமிடுவது அவசியம்.
அந்த வகையில், இந்த பயணத்திற்கான எனது திட்டமிடல் இருக்கும்,” என்றார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாகிஸ்தான் பயணம் குறித்து நேற்று (அக் 04) செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ‘அரசாங்கத் தலைவர்கள்’ மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
அக்டோபர் 15-16 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் இந்தியக் குழுவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்குவார். 2016-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லும் முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார்.
ஆகஸ்ட் 2016-ல் அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இஸ்லாமாபாத் சென்றார்.
அதன்பிறகு, பாகிஸ்தானில் எந்த ஒரு கூட்டத்திலும் இந்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சென்றார்.
2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாட்டை இந்தியா ரத்து செய்தது.
விதிவிலக்காக, கடந்த சில ஆண்டுகளில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்காக மட்டும் இரண்டு மத்திய அமைச்சர்களை பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியுள்ளது.