ஈரோடு: 3.57 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கேன்சர் சோதனையில் 53 பேருக்கு கேன்சர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 73 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 18 நகர்புற நலவாழ்வு மையங்கள், 98 கிராமப்புற துணை சுகாதார நல வாழ்வு மையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மையம் என 198 சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மையங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
முகாமில் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் பரிசோதனை செய்வதுடன், இல்லம் தேடி சென்றும் பரிசோதனை நடத்துகின்றனர்.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 478 பேருக்கு வாய் புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 765 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை, 2 லட்சத்து 21 ஆயிரத்து 816 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 699 பேர் வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. 86 ஆயிரத்து 63 பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 22 பேருக்கும், 62 ஆயிரத்து 880 பேருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்ததில் 9 பேருக்கும் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மொத்தம் 3 லட்சத்து 57 ஆயிரத்து 642 பேருக்கு பரிசோதனை செய்ததில் 53 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.