புதுடில்லி: ‘இந்தியா எங்களுக்கு மதிப்புமிக்க கூட்டாளியாகவும், நண்பராகவும் உள்ளது’ என, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கூறினார். அண்டை நாடான மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று டெல்லி வந்தார்.
டெல்லியில் ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: இந்தியாவுடனான உறவுகளுக்கு மாலத்தீவு முன்னுரிமை அளிக்கும். இந்தியா எங்களுக்கு மதிப்புமிக்க கூட்டாளியாகவும் நண்பராகவும் உள்ளது. பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன.
இந்தியாவுடன் மாலத்தீவு வலுவான உறவைக் கொண்டுள்ளது. பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாம் இணைந்து செயல்படுவோம். மற்ற நாடுகளுடனான நமது உறவு, இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது.
இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டது உள்ளூர் மக்களின் முடிவு ஆகும் இந்தியாவிற்கு பயணம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அன்பான அழைப்பிற்காக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பயணம் மாலைதீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். நமது வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.