புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அகரபட்டியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே பூரண மதுவிலக்கு சாத்தியமாகும். அதே சமயம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்பதே முதல்வரின் லட்சியம்.
இதை நிறைவேற்ற முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 2016-ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கூறினோம்.
அதனால்தான் திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று கூறினோம், பூரண மதுவிலக்கை உடனடியாக கொண்டு வருவோம் என கூறவில்லை.
அதன் அடிப்படையில் திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகளை குறைத்துள்ளோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதாகவும், எப்எல்2 (மனமகிழ் மன்றம்) போன்ற மதுக்கடைகளை திறப்பதாகவும் கூறுவது தவறு.
FL2 கடைகளுக்கும் டாஸ்மாக் பார்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.