வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது.இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியாவில் உள்ள பட்லரில் நடந்த குடியரசு கட்சி பேரணியில் டிரம்ப் பங்கேற்றார்.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். டிரம்ப் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில், ஒருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஒரு தோட்டா டிரம்பின் வலது காதில் பாய்ந்தது. காயங்களுடன் உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் படுகொலை முயற்சி நடந்த பட்லர் நகரில் குடியரசு கட்சியின் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலோன் மஸ்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிரம்ப் தனது உரையின் போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸையும் விமர்சித்தார். வரும் ஜனாதிபதி தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோற்கடிக்கப்பட வேண்டும்.தீவிர இடதுசாரியான கமலா ஹாரிஸை, பார்லிமென்டில் கூட யாரும் மதிப்பதில்லை.
எல்லை பாதுகாப்பு, பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டார். துணை அதிபராக, பல்வேறு நாடுகளில் சிறை தண்டனை அனுபவித்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள் என மொத்தம் 2.1 கோடி பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர் நான் ஆட்சிக்கு வருகிறேன், எல்லைகள் மூடப்படும், சட்டவிரோதமாக வந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றார். எலான் மஸ்க்கும் டிரம்ப்பை ஆதரித்து பேசினார்.