துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 9-வது ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நிதா தார் 28, முனீபா அலி 17, சயீடா அரோப் ஷா 14, கேப்டன் பாத்திமா சனா 13 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய தரப்பில் அருந்ததி ரெட்டி 3 விக்கெட்டுகளையும், ஸ்ரேயங்கா பாட்டீல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரேணுகா சிங், தீப்தி சர்மா, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய மகளிர் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
அதிகபட்சமாக ஷபாலி வர்மா 35 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 பந்துகளில் 29 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 28 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 9-ம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கிறது.