இயக்குனர் மோகன் ராஜா, ரீமேக் இயக்குனர் எனப் பெயரெடுத்தவர். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் பிற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். தனது மீதுள்ள ரீமேக் இயக்குனர் என்கிற பெயரை உடைக்க முடிவெடுத்து, அவர் இயக்கிய படம் தான் தனி ஒருவன். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியின் மூலம், தன்மீது இருந்த விமர்சனத்தை தகர்த்தெறிந்தார் இயக்குனர் மோகன் ராஜா.
தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு ஹிப்ஹாப் ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாகவே, படங்களுக்கு பாடல்கள் வாங்கும்போது இயக்குனர்கள் பாடலின் சூழலை சொல்லி பாட்டை வாங்கிய பின்னர் தான் ஷூட்டிங்கே போவார்கள். ஆனால் தனி ஒருவன் படத்தை எடுத்து முடித்துவிட்டு, இந்த இடங்களில் எல்லாம் எனக்கு பாடல்கள் வேண்டும் என கேட்டுக்கொண்டு வந்தாராம் இயக்குனர் மோகன் ராஜா. அப்போது, இப்படத்தை பார்த்ததும், தனக்கு இசையில் புகுந்து விளையாட நிறைய ஸ்கோப் இருப்பதை உணர்ந்த ஆதி இசையமைக்க தொடங்கினாராம்.
தனி ஒருவன் படத்தில் பணியாற்றிய போது, வெளியே சென்று எந்த இயக்குனரை பார்த்தாலும் இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என சொல்லுவாராம் ஆதி. அந்த அளவுக்கு அப்படத்தின் மீது மிகவும் ஈடுபாடுடன் பணியாற்றி இருக்கிறார் ஆதி. அப்படி அப்படத்திற்காக பாடல் கம்போசிங் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், இயக்குனர் மோகன் ராஜா டீ குடிக்க வெளியே சென்றிருக்கிறார். அவர் போன கேப்பில், ஹிப்ஹாப் ஆதி ஒரு மாஸ்ஹிட் பாடலை எழுதியிருக்கிறார்.
அந்த பாடல் தான் தனி ஒருவன் படத்தில் இடம்பெறும் தீமை தான் வெல்லும் பாடல். இந்தப் பாடலை, இயக்குனர் டீ குடிக்க போன கேப்பில் எழுதியுள்ளார் ஹிப்ஹாப் ஆதி. அப்பாடலில் “சிவனாய் இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான்” என்கிற வரி, இயக்குனர் மோகன் ராஜாவுக்கு மிகவும் பிடித்த வரியாக இருக்கிறதாம். இப்படி ஒரு சில நிமிடங்களில் எழுதி முடிக்கப்பட்ட இந்த பாடல், பலரது போன்களில் இன்று ரிங்க்டோனாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.