புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் உள்ள கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனதே வசித்து வருகிறார். இவரது மனைவி அஞ்சனா.
காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, திடீரென அவர்களது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடியபடி வீட்டில் உணவு சமைத்து சாப்பிட்டார்.
அஜய் வீட்டில் தலித்துகள் பாரம்பரிய முறையில் சமைக்கும் உணவை ராகுல் சமைத்துள்ளார். எப்படி சமைக்க வேண்டும் என்று அஜய் மற்றும் அவரது மனைவியிடம் கேட்டு சமைக்கிறார்.
அஜய் குடும்பத்துடன் சேர்ந்து கத்திரிக்காய், கீரை, பருப்பு சேர்த்து ‘ஹர்பர் யாச்சி பாஜி’ என்ற உணவை ராகுல் சமைத்துள்ளார். அப்போது அவர்களின் உணவுப் பழக்கம் பற்றிக் கேட்டறிந்தார்.
நேற்று தனது எக்ஸ் இணையதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், சமூக ஆர்வலர் ஷாஹுவை மேற்கோள் காட்டி, “தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி மேலும் கூறியிருப்பதாவது:- அஜய் மிகுந்த ஆர்வத்துடன் என்னை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவருடைய அழைப்பை ஏற்று நான் சென்றேன். அன்புடன் என்னை வரச் செய்தார். சமைக்கவும் அனுமதித்தார்.
தலித் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பல்வேறு அனுபவங்களைப் பற்றி அஜய்யின் குடும்பத்தினரிடம் கேட்டேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.