கோபி: கோபி அருகே குண்டேரிபள்ளம் அணை நிரம்பியதை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை, குன்றி மலையடிவாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணையாகும். 42 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அணைக்கு குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட துணை ஆறுகள் வழியாக மழை நீர் வந்து சேருகிறது.
குண்டேரிபள்ளம் அணையில் இருந்து கொங்கர்பாளையம், வினோபாநகர் வாணிபுத்தூர், குண்டேரிபள்ளம், மோட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த மாதம் இரு மதகுகளும் பாசனத்திற்காக திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் சுமார் 3 அடி உயர்ந்து 41 அடியாக இருந்தது.
அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் கனமழை பெய்ததால் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இதனால் அணையின் நீர்வழிப்பாதையில் உள்ள கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கு தண்ணீர் வருவதை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குண்டேரிபள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து தற்போது மழை பெய்து அணை மீண்டும் நிரம்பியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.