கொழும்பு: அதானி குழுமத்துடனான காற்றாலை மின்சார ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் 440 மில்லியனுக்கும் அதிகமான (சுமார் ரூ. 3,700 கோடி) செலவில் 484 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை உருவாக்க அதானி குழுமம் இலங்கை அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத், அதானி கிரீன் எனர்ஜியின் காற்றாலை திட்டங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கிய அனுமதியில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதானி நிறுவனத்துடனான காற்றாலை மின் உற்பத்தி ஒப்பந்தத்தை மீள்பரிசீலனை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரசாரத்தின் போது அதானியின் காற்றாலைத் திட்டம் இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தல் மற்றும் தான் ஜனாதிபதியானால் அதானி உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வேன்.