சென்னை: உலக பார்வை தினத்தை முன்னிட்டு, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, வரும் 31-ம் தேதி வரை குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகிறது.
சென்னையில் உள்ள டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்ரி கல்லூரியில் நேற்று உலக பார்வை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு கண் கண்ணாடி மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவக் கல்லூரி முதல்வர் கற்பகம், அகர்வால்ஸ் மருத்துவப் பணிகள் துறை மண்டலத் தலைவர் டாக்டர் எஸ்.சௌந்தரி, குழந்தைகள் நல மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் எஸ்.சௌந்தரி கூறியதாவது:- சென்னையில் 12 ஆதரவற்றோர் இல்லங்களில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பரிசோதனை, சிகிச்சை, கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து அகர்வால்ஸ் மருத்துவமனைகளிலும் வரும் 31-ம் தேதி வரை குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதில் பங்கேற்க 9594924048 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். உலகளவில் 45 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பலருக்கு முறையான சிகிச்சை பெறுவதற்கான வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை.
இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட 1,000 குழந்தைகளில் ஒருவர் பார்வைக் குறைபாடுடையவர். உலகிலேயே பார்வையற்ற குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக, கிட்டப்பார்வை எனப்படும் மயோபியா, 5 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களில் 7.5 சதவீதத்தினருக்கு உள்ளது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.