சென்னை: தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய கிழக்கு அரபிக்கடலில் கர்நாடகா-கோவா கடற்கரையில் நீடிக்கிறது.
இது அடுத்த சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் வரும் 12-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 14-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 15 மற்றும் 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (அக்.,11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (அக்.12) திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.