ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2019-ல் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370 சிறப்பு பிரிவும் நீக்கப்பட்டது.
இந்நிலையில், செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 8-ம் தேதி வெளியான முடிவுகளில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களிலும், மற்ற கட்சிகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 7 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவைத் தலைவராக உமர் அப்துல் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் விரைவில் ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பின், பரூக் அப்துல்லா கூறுகையில், ”எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டசபை குழு தலைவராக, உமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக ஒமர் விரைவில் பதவியேற்பார்,” என்றார். இந்நிலையில், பியாரே லால் சர்மா, சதீஷ் சர்மா, சவுத்ரி முகமது அக்ரம், டாக்டர் ராமேஷ்வர் சிங் ஆகிய 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல் லாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சட்டப் பேரவையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் பலம் 46 ஆக உயர்ந்துள்ளது.இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களை தேசிய மாநாட்டுக் கட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.