புதுடில்லி: ஓம் பிர்லா மீண்டும் தேர்வு.. 18வது மக்களவையின் சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த ஓம் பிர்லா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுதந்திரத்துக்குப் பிறகு 4வது முறையாக சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும் இண்டியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிட்டனர்.
மக்களவை கூடியதும் ஓம் பிர்லா பெயரை மோடி முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை காங்கிரஸ் உறுப்பினர் பிரேமசந்திரன் முன்மொழிய, கனிமொழி, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.
இதைத்தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் மகதாப் அறிவித்தார். இதையடுத்து, தொடர்ந்து 2வது முறையாக மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இருவரும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், உறுப்பினர்களின் கைத்தட்டல்களுக்கு இடையே, ஓம் பிர்லாவை, பிரதமர் மோடி, ராகுல், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோஅழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.