சென்னை: வித்யாரம்பம் நிகழ்ச்சி… விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் எனும் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயிலில் குழந்தைகளின் நாவில் தேன் தொட்டு வைத்து நெல்மணிகளில் அ எழுத வைத்து புதிதாக பள்ளிகளில் சேரவிருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் வித்யாரம்பம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள வனமாலீஸ்வரர் மற்றும் சரஸ்வதி தேவி கோயிலில் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் அர்ச்சகர்கள் தங்க எழுத்தாணிக் கொண்டு தேனில் நனைத்து குழந்தைகளின் நாவில் எழுத்துக்களை எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டம் கலைமகள் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தாடை அணிந்து மாலை அணிவித்து மடியில் அமர வைத்து அரிசியில் விரலி மஞ்சள் மூலம் அ என எழுதி கல்வியை துவங்கினர்.
கிருஷ்ணகிரி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் தங்கம் போன்ற உலோகத்தை தேனில் தொட்டு குழந்தைகளில் நாவில் வைத்த அர்ச்சகர்கள் அவர்களின் கையை பிடித்து தமிழ் எழுத்துக்கள், குலதெய்வ பெயர், குழந்தைகள் பெயரை அரிசியில் எழுதினர்.
சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் தங்களது பெயரை அரிசியில் எழுதினர். தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்தனர்.
திருப்பூர் – கல்லூரி சாலையிலுள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எழுது பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன.