சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் கலைஞர் சர்வதேச அரங்கம் கட்ட ரூ. 487 கோடிக்கு தமிழக அரசு டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த சர்வதேச அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கட்டுமான பணி துவங்கியுள்ளது. இந்த சர்வதேச அரங்கில் 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு அரங்கம், 10,000 இருக்கைகள் கொண்ட கண்காட்சி அரங்கம் மற்றும் மாநாட்டு அரங்குகள் உள்ளன. மைதானத்தின் வெளிப்புறப் பணிகளான சாலை வசதி, சுற்றுச்சுவர், நுழைவு வாயில் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், கலைஞர் சர்வதேச அரங்கத்தில் 10,000 வாகனங்கள் நிறுத்தும் வசதி மற்றும் உணவு விடுதிகள் உள்ளன. கட்டுமானப் பணிகள் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, தமிழகத்தில் சிறந்த வசதிகளை உருவாக்க விரும்பினார். இதன் அடிப்படையில், உலகளாவிய தொழில் கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள், தொழில்நுட்ப சந்திப்புகள், உலக திரைப்பட விழாக்கள் என ‘கலைஞர் மாநாட்டு மையம்’ அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சென்னை மாநகரில் புதிய தொழில்நுட்ப, கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வசதிகளை உருவாக்குவதுடன், அரசின் வருவாயையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.