முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வித்திடுவேன் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
கடந்த மாதம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி கட்சியினரை உற்சாகப்படுத்தினார். விஜய் தவெகவின் தலைவராகவும், புஸ்ஸி ஆனந்த் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, சில பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய பதவிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளனர். மேலும், நடிகர் விஜய் இன்னும் தீவிர அரசியலுக்கு வரவில்லை.
தவெகவின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. மாநாட்டில் 5 லட்சம் பேர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகன நிறுத்தம், கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மாநாட்டுக்கு காவல் துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்து வரும் நிலையில், மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கருதி நடிகர் விஜய் 27 குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தவெக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “எங்கள் தலைவர் விஜய் அறிவித்தபடி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாட்டுக்கான களப்பணிகள் நடந்து வருகிறது. .”
மாநாட்டுப் பணிகளை சட்டமன்றத் தொகுதி அளவில் ஒருங்கிணைக்க மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.