சென்னை: வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 15 மற்றும் 16-ம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
இதனால் தமிழகம் முழுவதும் இன்று முதல் 17-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தெற்கு மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யாது. இந்நிலையில் இந்தியாவின் தென் பகுதிகளில் கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது.
அதன் தாக்கம் காரணமாக தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை 15 அல்லது 16-ம் தேதி தொடங்கலாம். தமிழகத்தின் உள்பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.
இதன் காரணமாக மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 17, 18, 19 தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் 14-ம் தேதி (இன்று) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
15-ம் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
17-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தரமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மதுரையில் அதிகபட்சமாக 16 செ.மீ. சிவகங்கை மாவட்டம் திருப்பூ வனத்தில் 14 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சிவகாசி, மதுரை தல்லாகுளம், பெரியபட்டி, தஞ்சாவூர் மாவட்டம் வெட்டிக்காடு, ராமநாதபுரம் மாவட் டத்தில் ராமேசுவரத்தில் 12 செ.மீ., மதுரை வடக்கு 11 செ.மீ., விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம், அருப் கோட்டை, திருச்சி மாவட்டம் பொன்னையாறு டி.டி., 10 செ.மீ. , மேட்டுப்பட்டி, மழை பதிவாகியுள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் 14 மற்றும் 15-ம் தேதிகளில் அதிகபட்சமாக 55 கி.மீ. வேகத்தில், 16, 17-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் 65 கி.மீ. சூறாவளி காற்றும் அதிக வேகத்தில் வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக்கடலில் இன்று உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி நகரும்.
இதன் காரணமாக வரும் 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.