நியூயார்க்: லாஞ்ச்பேடுக்கே மீண்டும் பத்திரமாக பூஸ்டர் ராக்கெட் திரும்பியது, இது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பெரிய சாதனையாக மாறியுள்ளது.
விண்ணில் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து சோதனை முயற்சியாக ஸ்டார்ஷிப் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இரண்டரை நிமிடத்துக்குப் பிறகு, விண்கலத்தில் இருந்து பூஸ்டர் ராக்கெட் பிரிந்தது. 233 அடி உயரமும், 5,000 மெட்ரிக் டன் எடையும் கொண்ட அந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட், புவியீர்ப்பு விசையை எதிர்த்து மீண்டும் ஏவுதளத்துக்குத் திரும்பியது.
அதனை, லாஞ்ச்பேடில் உள்ள சாப்ஸ்டிக்ஸ் எனப்படும் பிரம்மாண்ட ரோபோடிக் கரங்கள் பிடித்த காட்சி பிரமிக்கத்தக்கதாக இருந்தது. வழக்கமாக கடலில் வந்து விழும் பூஸ்டர் ராக்கெட், முதன்முறையாக ஏவப்பட்ட லாஞ்ச்பேடுக்கே பத்திரமாகத் திரும்பியது விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.