ஒட்டாவா: இந்தியா தவறு செய்துவிட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதை இந்தியா மறுத்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து விரிசல் அடைந்தன.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “கனேடிய மண்ணில் கனேடியர்களை அச்சுறுத்தும் மற்றும் கொல்லும் வெளிநாட்டு அரசாங்கத்தை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
இது கனடாவின் இறையாண்மையை மீறும் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த கோடையின் தொடக்கத்தில் இருந்து நாங்கள் எங்கள் ‘ஃபைவ் ஐஸ் பார்ட்னர்களுடன்’ (ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, யுகே மற்றும் அமெரிக்கா) நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.
குறிப்பாக இந்தியாவின் இத்தகைய நடவடிக்கையை எதிர்கொண்ட அமெரிக்காவுடன் இந்த விவகாரத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார்.
முன்னதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கனடாவில் உள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்திய தூதரக அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதம் மற்றும் வன்முறைச் சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போதைய கனேடிய அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்பவில்லை.
எனவே அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது. கனடா அரசிடமிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. இதில் ஒரு வழக்கில் இந்திய தூதருக்கும் மற்ற தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கடுமையாக மறுக்கிறது. வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு ட்ரூடோ தலைமையிலான அரசு இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
கனேடிய பிரதமர் ட்ரூடோ இந்தியாவுடன் நீண்டகாலமாக பகைமையை பேணி வந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு தனது வாக்கு வங்கியை அதிகரிக்க இந்தியா வந்தார்.
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய அமைச்சர்களையும் அவர் நியமித்தார். இது தவிர, கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவின் உள்விவகாரங்களில் (விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக) தலையிட்டார்.
இது அவரது இந்திய விரோத உணர்வை பிரதிபலித்தது. இந்தியாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கையை வெளிப்படையாக ஆதரிக்கும் அரசியல் கட்சியை ட்ரூடோ அரசாங்கம் நம்பியுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு இருப்பதை ட்ரூடோ கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இதையடுத்து வெளிநாட்டு தலையீடு தொடர்பான ஆணையத்தில் ட்ரூடோ நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்நிலையில், இதை திசை திருப்ப இந்தியா மீது குற்றம் சாட்டுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.