செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை பகுதியில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கடல் நீச்சல் வீரரை உயிர்காக்கும் காவலராக, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நியமித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் ஆபத்தை உணராமல் பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.
சில சமயம் அலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இந்நிலையில், மகாபலிபுரம் பகுதியில் உயிர்ச்சேதம் நடப்பதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, மாமல்லபுரம் கடற்கரைப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக உயிர் காக்கும் காவலரை நியமித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் மாமல்லபுரம் சிறப்பு நிலை நகராட்சி சார்பில் ஒப்பந்த ஊழியர் கிருஷ்ணராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணி நியமன ஆணையை கிருஷ்ணராஜ் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொண்டார். அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.