ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறுகிறது.
தற்போது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேஎம்எம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) போன்ற அகில இந்தியக் கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன.
இந்நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக அம்மாநில இந்திய கூட்டணியில் உரசல் ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 81 இடங்களில் ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் 70 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 11 இடங்கள் ஆர்ஜேடி மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று அறிவித்தார்.
இதற்கு ஆர்ஜேடி எதிர்ப்பு தெரிவித்தது. ஆர்ஜேடி செய்தி தொடர்பாளர் மனோஜ் குமார் கூறும்போது, “எந்த உதவியும் இல்லாமல் 15 முதல் 18 தொகுதிகளில் பாஜகவை வீழ்த்த முடியும். ஆனால் ஜே.எம்.எம் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளன.
“2 நிமிட நூடுல்ஸ் போன்ற அனைத்து முடிவுகளையும் நீங்கள் எடுக்க முடியாது,” என்று அவர் விமர்சித்தார். காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது கூறுகையில், ”கூட்டணி கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன. வேட்பாளர்களின் வெற்றியின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்படுகிறது.
தொகுதி பங்கீடு தொடர்பாக யாரிடமும் அதிருப்தி இல்லை,” என்றார்.