சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2024-26-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) சீரமைக்கப்பட்டுள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் 90 சதவீதம் பள்ளி வாரியாக எமிஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்எம்சி குழுக்களுக்கான முதல் கூட்டம் அக்டோபர் 25-ம் தேதி பள்ளிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது.
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; அதேபோல், அந்த உறுப்பினர்களை சேர்க்க பள்ளிக்கூடத்தில் வாட்ஸ்அப் குழுவை தலைமையாசிரியர் உருவாக்க வேண்டும். முதல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் நிகழ்ச்சி நிரல் குறித்து உறுப்பினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
எஸ்எம்சி குழுக்களுக்கு வழிகாட்டும் வகையில் புதிய உறுப்பினர்களுக்கு தலைமைச் செயலாளர் தலைமையிலான மாநில கண்காணிப்பு குழு மற்றும் கலெக்டர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்பு குழு குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.