காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக காங்டாக்கில் உள்ள சர் துடாப் நாம்க்யால் நினைவு மருத்துவமனையில் (எஸ்டிஎன்எம்) சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அதில் 2 கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.
அந்தப் பெண்ணிடம் விசாரித்ததில், 12 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2012-ம் ஆண்டு இதே எஸ்டிஎன்எம் மருத்துவமனையில் அவருக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சையின் போது சிகிச்சை அளித்த டாக்டர்கள் வயிற்றில் கத்திரிக்கோலை வைத்து மறந்து தைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, எஸ்டிஎன்எம் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர், அந்த பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, வயிற்றில் இருந்து 2 கத்தரிக்கோல்களை அகற்றினர். அறுவை சிகிச்சை முடிந்து தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விசாரணை நடைபெற்று வருவதாக மருத்துவமனையின் டீன் தெரிவித்தார்.