புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.
“புயலுக்கு பயப்பட தேவையில்லை, அரசு முழுமையாக தயாராக உள்ளது. தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
தேசிய மற்றும் மாநில மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் படையணியும் தயார் நிலையில் உள்ளது புயல் நிலைமையை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பு, சாலை போக்குவரத்து போன்றவற்றில் தடை ஏற்பட்டால், விரைவில் தீர்வு காணப்படும். இதுகுறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் விவாதித்தோம். அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதையோ அல்லது அதிக விலைக்கு விற்பதையோ கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று முதல்வர் மோகன் சரண் மாஜி கூறினார்.
ஒடிசாவின் மூன்று மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டானா சூறாவளி வடக்கு ஆந்திரா, மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் வங்கதேசத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.