சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு அந்தமான் கடற்பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
பின்னர் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்.
பின்னர், இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்காள விரிகுடாவில் ஒடிசா – மேற்கு வங்கக் கடற்கரையை 24-ம் தேதி காலை அடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனுடன் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா கடலோர பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் வரும் 23-ம் தேதி உருவாகும் புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த ‘டானா’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.