பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னட-தமிழ் ஒற்றுமை மாநாடு நடந்தது. இதனை முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா திறந்து வைத்தார். அப்போது எடியூரப்பா கூறியதாவது:-
எனது ஆட்சியில் கர்நாடகாவில் கன்னட-தமிழர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து பெங்களூருவில் மூடப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறக்க நடவடிக்கை எடுத்தேன். இதற்காக அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் கன்னட கவிஞர் சர்வஞானச் சிலையும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இதையடுத்து இரண்டு சிலைகளும் பிரச்னையின்றி திறக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக இங்குள்ள தமிழர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களின் உழைப்பைப் போற்றும் வகையில், நான் முதலமைச்சராக இருந்தபோது, தமிழர்களின் நலனுக்காக முக்கியமான திட்டங்களை உருவாக்கினேன்.
கன்னடர்களும் தமிழர்களும் ஒரே தாய்நாடு என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அடிப்படையில் இருவரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு சகோதரர்களுக்கும் வித்தியாசம் இல்லை. கர்நாடகாவில் கன்னடரும் தமிழரும் இணைந்து வாழ வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.