‘கேஜிஎஃப் 3’ எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு நடிகர் யஷ் பதிலளித்துள்ளார். யஷ் நடித்த ‘கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஎஃப் 2’ படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக ‘கேஜிஎஃப் 2’ அனைத்து மொழிகளிலும் வசூலைக் குவித்தது. 3-ம் பாகத்தின் தொடக்கமாக படத்தின் கதையை முடித்திருந்தார் பிரசாந்த் நீல். இதனால் ‘கேஜிஎஃப் 3’ எப்போது என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்தனர். அதற்கு யஷ் ஹாலிவுட் இணையத்திற்கு அளித்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் யாஷிடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த யஷ், “தற்போது நாங்கள் நடித்துக்கொண்டிருக்கும் இரண்டு படங்களுக்குப் பிறகு ‘கேஜிஎஃப் 3’ நிச்சயம் நடக்கும். அதற்கான ஐடியாவும் இருக்கிறது. நாங்கள் அதைப் பற்றி பேசுகிறோம்.
நேரம் வரும்போது கண்டிப்பாக நடக்கும். நான் படம் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. மக்கள் ஏற்கனவே நிறைய கொடுத்திருக்கிறார்கள். ‘கேஜிஎஃப் 3’ குறித்து பெருமைப்படுவார்கள். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் படம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த அளவுக்கு ராக்கி பாய் கேரக்டரை எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார் யாஷ். யஷின் ‘டாக்ஸிக்’ மற்றும் ‘ராமாயணம்’ படங்கள் உருவாகி வருகின்றன. ‘ராமாயணம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார் யஷ்.