வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டாணா’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே நாளை (அக்டோபர் 25) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் வடமேற்கு திசையில் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தற்போது, ஒடிசாவில் இருந்து தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த புயல் நாளை (அக்.25) காலை ஒடிசாவின் பித்ரகனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடக்கும் போது கனமழையுடன் மணிக்கு 120 கி.மீ. சூறாவளி காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேந்திரபாரா, பத்ரக், பாலசோர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 10 லட்சம் மக்களை ஒடிசா மாநில அரசு வெளியேற்றியுள்ளது.
ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் உள்ளது. மேலும், ஒடிசாவில் உள்ள உயர்நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. புவனேஸ்வர் விமான நிலையத்தில் விமான சேவை 16 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் காரணமாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வே அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏராளமான ரயில்களை ரத்து செய்துள்ளது.
‘டானா’ புயல் பாதிப்புகளை சமாளிக்க மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.