சென்னை: பண மோசடி வழக்கு விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார். தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சஞ்சய்பாபா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மொத்தம் 2,222 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முதல் 100 பேருக்கு மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் 50 பேருக்கு சம்மன் அனுப்பிய நீதிபதி, பலர் ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.