புதுடெல்லி: 70 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அவர்களின் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் மருத்துவக் காப்பீடு வழங்கும் ‘ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா’ திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னோடித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த திட்டத்திற்கான பெயர் பதிவு தேசிய அளவில் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதற்கான நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு தழுவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவதற்காக மத்திய அரசால் யூவின் உருவாக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த செயலி உள்ளிட்ட முக்கிய சுகாதார திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இத்திட்டம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “எழுபது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் குடும்ப அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். டாக்டருக்கான சந்திப்புகளைப் பெற யூவின் ஆப் பயன்படுத்தப்படும்” என்று அவர்கள் கூறினர்.