புதுடெல்லி: தலைநகர் டெல்லி இந்தியாவின் மிக மோசமான காற்று மாசுபட்ட நகரமாக அறியப்படுகிறது. டெல்லிக்கு கடந்த 10 ஆண்டுகளாக காற்று மாசு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், தீபாவளி வாரம் தொடங்கியுள்ள நிலையில், இன்றும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த 24 மணி நேர சராசரியின்படி, டெல்லியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 264 ஆக இருந்தது. இது முந்தைய பதிவை விட 90 புள்ளிகள் வீழ்ச்சி என்றாலும், இது இன்னும் மோசமானதாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 2025 ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பனிக்காலத்தில் காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெல்லி மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லியில் காற்று மாசு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தீபாவளி வாரத்தில் தடையை மீறி பட்டாசுகளை வெடித்தால் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்காக டெல்லிக்குள் பட்டாசு கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். காற்றின் தரம் இன்று 264 ஆக உள்ளது. இந்த அளவு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
காற்று மாசு அதிகரிப்பால், தொண்டை அடைப்பு, மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். காற்றில் உள்ள மாசுபாட்டை அளவிட காற்றின் தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான காற்றுத் தரக் குறியீடு (AQI) சிறந்ததாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 திருப்திகரமாக உள்ளது, 101 முதல் 200 வரை மிதமான காற்று மாசுபாடு என்று கருதப்படுகிறது.
201-ல் இருந்து 300-க்கு போனால் காற்று மாசு அதிகம். 301 முதல் 400 வரை அதிகமாக உள்ளது. 401 முதல் 500 வரையிலான AQI மிகவும் மோசமான காற்று மாசுபாட்டாகக் கருதப்படுகிறது. தீபாவளிக்கு பின், மாசு அளவு மேலும் அதிகரிக்கும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.