புதுடெல்லி: தீபாவளியை முன்னிட்டு ஸ்மார்ட்போன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்., 31ல் கொண்டாடப்பட உள்ளதால், பட்டாசு, தங்க நகைகள், ஆடைகள், மொபைல் போன்கள் வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்லி, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
தசராவுக்குப் பிறகு ஆஃப்லைன் விற்பனை அதிகரித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஆஃப்லைன் விற்பனை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து ஸ்மார்ட் போன் விற்பனை நிறுவனம் ஒன்றின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு விற்பனை காலத்துடன் ஒப்பிடுகையில், பண்டிகை கால விற்பனையில் நல்ல அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற சந்தை நிறுவனங்கள் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல்களுக்கு பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. மொபைல் போன் நிறுவனங்கள் தங்களது விற்பனை இலக்கை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிராண்டுகள் அவர்களின் மொபைல் போன்களின் சராசரி விலை ரூ. 1,000 முதல் ரூ. 23,000 என்று வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகில இந்திய மொபைல் விற்பனையாளர்கள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் லக்யானி கூறுகையில், சாம்சங், விவோ மற்றும் ஆப்பிள் போன்றவற்றின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தேவை உள்ளது. அதே நேரத்தில், Xiaomi 5G ஸ்மார்ட்போன்களின் விலை உயர்ந்துள்ளது. கவர்ச்சிகரமான சலுகைகள், இலவசங்கள் மற்றும் பணத் தள்ளுபடிகள் காரணமாக இந்த சீசனில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.