வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை விற்க அமெரிக்க நீதித்துறை வற்புறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டெஸ்க்டாப்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் கூகுள் குரோம் இணைய உலாவியைப் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கூகுள் பிரவுசரை விற்பனை செய்ய உள்ளது. காரணம் என்னவென்று பார்ப்போம். கடந்த ஆகஸ்ட் மாதம், கூகுள் தனது குரோம் பிரவுசரின் மூலம் தேடுதல் சந்தையில் சட்டவிரோதமாக ஏகபோக உரிமை பெற்றுள்ளதாக அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்தார். இந்நிலையில் அந்த நீதிபதி மூலம் கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய வேண்டும் என அமெரிக்க நீதித்துறை ஆலோசனை வழங்க உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க நீதித்துறை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அனைத்து சட்டச் சிக்கல்களையும் கடந்து இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க அரசு முயற்சித்து வருவதாக கூகுள் சார்பில் லீ-ஆன் தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பயனர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் ஏகபோக உரிமைகளை முறியடிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகத்தின் கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த வழக்கு வரும் நாட்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அரசு சற்று நிதானமான முடிவை எடுக்கும் என்று தெரிகிறது.