புதுடில்லி: CBSE 12-ம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப காலத்தை நீட்டிக்கக் கோரிய மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெற்றது. விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஆசிரியர்களால் ஆன்லைனில் மதிப்பீடு செய்யப்பட்டன.
மறுமதிப்பீட்டிற்காக விடைத்தாள் நகல்களை பெற்ற மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சில விடைத்தாள்களில் வேறு மாணவர்களின் பக்கங்கள் இணைக்கப்பட்டிருந்ததாகவும், ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் தெளிவாக இல்லையெனவும் புகார்கள் எழுந்தன.
மேலும் CBSE இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் ஸ்கேனிங் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கல்வி வாரியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மறுமதிப்பீட்டு விண்ணப்ப காலத்தை நீட்டிக்க இந்திய தேசிய மாணவர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டால் முடிவுகள் வெளியீடு மேலும் தாமதமாகும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.