திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சாதாரண நாட்களிலேயே 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்வது வழக்கம். வார இறுதி நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், நேற்று மாலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்-2 மற்றும் நாராயணகிரி காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பின. சிலத்தோரணம் வட்டம் முதல் பாட்டா கங்கம்மா கோவில் வட்டம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். தற்போது சாமி தரிசனம் செய்ய சுமார் 14 மணி நேரம் ஆகிறது.
நேற்று ஒரே நாளில் 75,428 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.4.50 கோடி உண்டியல் காணிக்கையும் வசூலானது.