கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றில் இன்று வெள்ளநீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது மூதாட்டி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, அந்த மூதாட்டி ஆற்றின் நடுவே இருந்த பெரிய பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். பாறைகளை பற்றிக்கொண்டு உயிர் தப்ப முயன்ற அவர் உதவிக்காக சத்தமிட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் வெள்ளநீரை பொருட்படுத்தாமல் கயிறுகளின் உதவியுடன் ஆற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் அடையாளம் மற்றும் ஆற்றில் எவ்வாறு விழுந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.