நெல்லை: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் தன்னை CBI இயக்குநர் என கூறி நுழைய முயன்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வேல்முருகன் என்ற நபர் தன்னை CBI இயக்குநர் என அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே செல்ல முயன்றார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் காவல்துறை பெல்ட் மற்றும் ஷூ அணிந்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் சோதனையில் CBI இயக்குநர், குற்றப்புலனாய்வு அதிகாரி, ஊழல் தடுப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு போலி அடையாள அட்டைகள் அவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.