பென்னாகரம்: கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய அருவிகளிலும், ஐந்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் குளிப்பதற்கும், பரிசலில் ஓடுவதற்கும் கடந்த 13-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 26,000 கனஅடியாக சரிந்தது.
ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறைய துவங்கியதால் பரிசலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். எனினும், மெயினருவியில் நீராட தடை உத்தரவு 15-வது நாளாக தொடர்கிறது. விடுமுறை நாளான நேற்று ஒகேனக்கல்லுக்கு குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சென்று மகிழ்ந்தனர்.
அதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 30,475 கன அடியாக குறைந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 106.48 அடியாக இருந்தது. நீர் இருப்பு 73.47 டிஎம்சி.