‘முடா’ ஊழல் தொடர்பாக, பெங்களூரு மற்றும் மைசூருவில், இரண்டாவது நாளாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். முடா நிலம் ஒதுக்கீட்டில் ரூ.4,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கிலும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக ஆர்டிஐ ஆர்வலர் கங்கராஜ் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் முடா அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பெங்களூரு, மைசூர், மாண்டியா உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
பெங்களூருவில் உள்ள மூடா முன்னாள் கமிஷனர்கள் நடேஷ், தினேஷ்குமார் ஆகியோரின் வீடுகளில் நேற்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டது. இது தவிர முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களான மைசூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயராம், தொழிலதிபர் ராகேஷ் பாப்பண்ணா ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக ஜெயராம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆனால் தற்போது அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன. அவருக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது, யாருடைய பினாமி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஜெயராம் வீட்டில் இருந்து மூடாவில் நிலம் கையகப்படுத்தியதற்கான ஆவணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆவணம் முடா முன்னாள் கமிஷனர் தினேஷ்குமாருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். மூடா ஊழல் தொடர்பான அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் 20 பெயர்கள் அடங்கிய பட்டியலை அமலாக்கத்துறை தயாரித்துள்ளது. பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் வரும் நாட்களில் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.