மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ”தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 9-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டை பட்டணத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நான்கு இயந்திர படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த ஆண்டு மட்டும் 450 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு 61 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது கடலோர காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்தனர்.
அவர்களின் கைது சட்டவிரோதமானது. பிற மாநில மீனவர்கள் தாக்கப்படும் போது, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் மீனவர்கள் கைது செய்யப்படும்போது தமிழகம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது.
எனவே, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களுக்கு சட்ட உதவி வழங்குவதுடன், அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், நீதிபதி முகமது சபிக் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கு சட்ட உதவி அளிக்கப்படுகிறது. தூதரகம் மூலம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசியல் நோக்கத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என, மத்திய அரசு தெரிவித்தது.
இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டது. மனுவை தள்ளுபடி செய்ய தலைமை நீதிபதி அமர்வு அனுமதி வழங்கியது.