பெங்களூரு: தேர்தல் வாக்குறுதிகள் மாநிலத்தின் நிதி ஆதாரத்திற்கு ஏற்ப மட்டுமே இருக்க வேண்டும் என மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் வலியுறுத்தியதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரம் இருந்தும் அளவுக்கு அதிகமான வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். 5, 6, 10 அல்லது 20 உத்தரவாதங்களை அறிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளேன். நிதி ஆதாரத்தின் அடிப்படையில் உத்தரவாதங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.
இல்லையெனில், திவால்நிலை ஏற்படும். சாலை அமைக்க பணம் இல்லை என்றால் மக்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். அரசு தோல்வியடைந்தால், வருங்கால சந்ததியினருக்கு கெட்ட பெயர் ஏற்படும்,” என்றார். கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து காங்கிரஸ் அரசு பரிசீலித்து வரும் நிலையில் கார்கே இவ்வாறு கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, “நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து இல்லாமல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. ஒரே நாடு ஒரே மாதிரியான தேர்தல் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை,” என்றார்.