சென்னை: ”அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இடைநிலை ஆசிரியர் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு கட்டங்களில் முடங்கியுள்ளன. இப்போது பாடத்திட்ட மாற்றம் என்று கூறி முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது.
எனவே, ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு போட்டித் தேர்வுகள் வரும் 2016-ம் தேதி நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை திட்டமிட்டு தாமதப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு வெளியிடப்பட்டு சுமார் 2000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2024 மே மாதத்தில் வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் மே மாதம் முடிந்து 6 மாதங்கள் ஆகியும் பணி நியமன அறிவிப்பு வெளியிடப்படவில்லை. முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டிக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், வரைவு பாடத்திட்டத்தை தயாரித்து இறுதி செய்ய குறைந்தது ஓராண்டு ஆகும். அதன் பிறகு போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டு, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். அதன்படி, 2021 முதல் 2026 வரை காலி பணியிடங்களுக்கு புதிதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள்.
இதனால் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்படும். முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டதை பாமக விமர்சிக்கவில்லை. மாறாக, பாடத்திட்டத்தின் திருத்தத்தின் நேரத்தை அது விமர்சிக்கிறது.
2021-ல் முதுகலை ஆசிரியருக்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டு இன்றுவரை மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த மூன்று வருடங்களில் பாடத்திட்டம் மாறியிருக்கலாம். அடுத்த போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்போது பாடத்திட்டம் மாற்றப்படும் என்று கூறாமல், ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்தும் முயற்சியாகவே பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் முடங்கியுள்ளன. இப்போது பாடத்திட்ட மாற்றம் என்று கூறி முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,” என்றார்.