திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், காமராஜர் சாலையில், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக, மாநகர பஸ் போக்குவரத்து கடந்த 6 மாதங்களாக நிறுத்தப்பட்டது. தற்போது, குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை வசம் ரோடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ரோட்டில் மாநகர பஸ்கள் இயக்கப்படாததால், பிராட்வேயில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மணலி மண்டல அலுவலகம் முன்பும், பெரம்பூரில் இருந்து வரும் பஸ்கள் மாத்தூர் எம்எம்டிஏ பகுதியிலும் சாலையோரம் நிறுத்தப்பட்டன.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே காமராஜர் சாலையில் மாநகர பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.சங்கரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மணலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மீண்டும் மாநகர பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்து, மணலி நெடுஞ்செழியன் சாலையில் உள்ள பழைய மணலி பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முதற்கட்டமாக மணலியில் இருந்து திருவொற்றியூர் வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டதாகவும், விரைவில் மணலியில் இருந்து மாத்தூர் வரை சாலை பராமரிப்பு பணிகள் முடிந்து விரைவில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகர போக்குவரத்து மண்டல மேலாளர் ஹேமச்சந்திரன், கிளை மேலாளர் லோகச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.