கொழும்பு: இலங்கையின் திட்டம்… இலங்கை முன்னாள் அதிபர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வது குறித்து, அமைச்சரவையின் துணைக்குழு விரைவில் ஆய்வுசெய்து அளிக்கும் பரிந்துரைகளின்படி முடிவு எடுக்கப்படும்’ என, அந்நாட்டு அதிபரின் செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், அனுரா குமாரா திசநாயகா தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை வீணாக்காமல் தடுக்கும் நோக்கில், மற்ற முன்னாள் அதிபர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு உட்பட பிற சலுகைகளை, அதிபர் அனுரா குமாரா திசநாயகா தலைமையிலான அரசு பறித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து அதிபரின் செயலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சில ஊடகங்களில் அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரவுகிறது. ‘முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பற்றி அமைச்சரவையின் துணைக்குழு ஆய்வு செய்து அளிக்கும் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வசித்து வரும் முன்னாள் அதிபர்கள் ஆறு பேருக்கும், 1986ம் ஆண்டின் அதிபர்களுக்கான சலுகைகள் சட்டத்தின்படி பாதுகாப்பு மற்றும் மற்ற சலுகைகளை அந்நாட்டு அரசு வழங்கி வருகிறது.